search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா கூட்டணி"

    பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. #Bihar #LaluYadav #Congress
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

    மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.

    உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம்மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது) கட்சிக்கு 3 தொகுதிகளும், முகேஷ் சானியின் விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் தரப்பட்டுள்ளன.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) கட்சிக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை ஒதுக்கித்தருகிறது.

    காங்கிரசுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தலுக்கு பின்னர் அவர் தனது லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    இடது சாரி கட்சிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் தரப்படவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    சென்னை:

    சென்னையில் ஜெ. பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    சென்னையில் ரூ 79 ஆயிரம் கோடியில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.  

    இன்னும் 3, 4 ஆண்டுகளில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளோம்.

    காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்?  மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி. திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப் பதவிக்கு வர முடியும்.


    இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் ஸ்டாலின். ராகுல் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறிய கருத்தை ஏற்க முடியாதென சந்திரபாபு நாயுடு கூறிவிட்டார்.

    தொழில்வளம் பெருக காரணம் அதிமுக அரசு தடையில்லா மின்சாரம் அளித்தது தான். உபரிமின்சாரம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். #ParliamentElection
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான தேர்தல் தேதி இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து சில முக்கிய மாநிலங்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க.வை வீழ்த்த இயலாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மெகா கூட்டணியை உருவாக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் மாநிலங்களில் வலுவாக உள்ள பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறின. அது மட்டுமின்றி கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் முக்கியஅங்கம் வகித்த சில கட்சிகளும் பா.ஜ.க.விடம் இருந்து விலகி காங்கிரசின் தலைமையை ஏற்க முன் வந்துள்ளன. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன.

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் திட்டத்தில் காங்கிரசை விட தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்குத் தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து, கூடுதல் நிதி தராததால் கோபம் அடைந்த சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, இந்த மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார். பா.ஜ.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அவர் காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார்.

    அது மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசி மெகா கூட்டணிக்குள் கொண்டு வந்தார். கடந்த மாதம் 22-ந்தேதியே எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் 5 மாநில தேர்தல் பிரசாரம் காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    5 மாநில தேர்தல் முடிந்து நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் உள்ள அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 14 கட்சித் தலைவர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த 14 கட்சிகள் விபரம் வருமாறு:-

    1. காங்கிரஸ்

    2. திமுக

    3. தெலுங்கு தேசம்

    4. திரிணாமுல் காங்கிரஸ்

    5. தேசியவாத காங்கிரஸ்

    6. பகுஜன் சமாஜ்

    7. சமாஜ்வாதி

    8. ராஷ்டீரிய ஜனதா தளம்

    9. இந்திய கம்யூனிஸ்டு

    10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

    11. ஆம்ஆத்மி

    12. தேசிய மாநாட்டு கட்சி

    13. மதச்சார்பற்ற

    14. லோக் தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ் கட்சி)

    இந்த 14 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர கேரளா, பஞ்சாப், புதுச்சேரி முதல்- மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் நேற்று முதல் குவிந்தனர்.


    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக நேற்று டெல்லி சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவர் 16-ந்தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

    மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நேற்று மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றார். இன்று காலை மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சத்தீஷ் சந்திரா மிஸ்ரா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று திரண்டுள்ள 14 கட்சிகளின் தலைவர்கள் இன்று தான் முதன் முதலாக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட இதுவரை இல்லாத அளவுக்கு மெகா கூட்டணிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 14 எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கவும், மாநிலங்களுக்கு ஏற்ப கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.

    அதோடு ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க, எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்ற வியூகம் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த வியூகம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தும் மிக முக்கியமான ஆயுதமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    மாநிலங்களில் செல்வாக்கு மிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே இடத்துக்கு வந்து இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவருமே மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் அனுபவம் பெற்றவர்கள். முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே இந்த மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


    ராகுலை முன் நிறுத்தினால் வெற்றி பெற இயலுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். தேர்தல் முடிந்து கட்சிகள் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை அமைக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவை கேட்டு பெறும் வியூகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வகுத்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் இந்த வியூகங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    அதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தீர்மானங்கள் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #ParliamentElection #Congress #DMK #BJP
    மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒன்று, அது கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி குழப்பம் நிறைந்தது என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறியதாவது:–

    இந்தியாவில் மெகா கூட்டணிக்கு நீண்ட வரலாறு உண்டு. சந்திரசேகர், வி.பி.சிங், சரண் சிங், ஐ.கே.குஜ்ரால், தேவேகவுடா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இதற்காக முயற்சி நடந்தது. இது, கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுட்காலத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும்.

    அந்த வகையில் மெகா கூட்டணி ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தோல்வியடைந்த திட்டம் ஆகும். மிகப்பெரிய கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய கருவும், அதைச்சுற்றி சிறிய குழுக்களும் இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவை இல்லை. தகுதியில்லாத தலைவர்கள் அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காக கூட்டணி சேர முயலும் தலைவர்களை கொண்டு கூட்டணி அமைக்க முடியாது.

    அப்படி இது போன்ற ஒரு கூட்டத்தை நீங்கள் அமைத்தால், வலுவான தலைவரை கொண்ட ஒரு நிலையான அரசுக்கும், முழுவதும் குழப்ப நிலையை கொண்டிருக்கும் ஒரு கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகவே 2019 தேர்தல் இருக்கும். இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும்.

    சர்வதேச தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருந்த போதும், இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தேவைப்படும் நேரங்களில் இணக்கம், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவைப்படுகிறது. இதற்கு குழப்பவாத கூட்டணிகள் உதவாது.

    வாராக்கடன்கள் அதிகரிப்பதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த வி‌ஷயத்தில் சிலர் வளர வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த 2007–08 ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.18 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச தேக்க நிலை நிலவியதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 2014–ல் இது ரூ.55 லட்சம் கோடியாக உயர்ந்தது.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வங்கிகள் கடன் வழங்கும் இலக்கை ஆண்டுதோறும் 31 சதவீதம் அதிகரித்தது. இதனால் திறனற்ற மற்றும் நிலையற்ற திட்டங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்துதான் வங்கி கொள்ளை தொடங்கி இருக்கிறது. எனவே இந்த உண்மையை காங்கிரஸ் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் ஆதார் மீதான அரசின் சட்டப்பூர்வ நோக்கத்தை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு உள்ளது. இதில் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதன் மூலம் இதை மீண்டும் கொண்டுவர முடியும்.

    ஓரினச்சேர்க்கை விவகாரத்தை அடிப்படை உரிமையாகவும், கருத்து சுதந்திரமாகவும் மாற்றியமைத்தால் பள்ளி விடுதி, சிறை, ராணுவ முகாம்களில் இந்த பாலியல் நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட நடைமுறைகளில் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா போன்ற ஒரு பன்மைத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், இதன்மூலம் பல சமூக விளைவுகள் நேரிடக்கூடும். அப்படி இந்த உத்தரவில் உறுதியாக இருந்தால் அரசியல் சட்டம் 14 மற்றும் 21–ம் பிரிவுகளை அனைத்து மதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எதிராக வலுவான மெகா கூட்டணியை ஏற்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

    மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் செயல் இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையே பா.ஜனதா கட்சிக்கு வெற்றியை தேடித்தந்தது. தற்போது அதுபோன்ற சூழல் எதுவும் இல்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்தி மோடி அரசை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்திலும் பா.ஜனதாவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் களம் இறங்கி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசையும் எதிர்க்கட்சிகள் பலமாக விமர்சித்து வருகின்றன.

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்திலேயே பா.ஜனதா கட்சிக்கு எதிராக கடுமையாக முழங்கினார். நாடு முழுவதும் காவி வண்ணத்தை அடிக்க நினைக்கும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஆவேசமாக குரல் எழும்பினார்.

    இதன் மூலம் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைவதை மு.க.ஸ்டாலின் உறுதிபடுத்தியுள்ளார். இதனால் பா.ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவே வாய்ப்புகள் உள்ளன.



    இதனை கருத்தில் கொண்டு, பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எதிராக வலுவான மெகா கூட்டணியை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற உள்ளன. இது தவிர மேலும் சில கட்சிகளையும் ஒருங்கிணைத்து கூட்டணியை பலமாக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அமைக்கும் இந்த கூட்டணியை அப்படியே கொண்டு சென்று சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்றே தி.மு.க. கணக்கு போட்டுள்ளது.

    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தலைவராகி உள்ள மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நேரத்தில் தொகுதி எண்ணிக்கையால் ஏற்படும் முறிவே பல நேரங்களில் கூட்டணிகளை சுக்கு நூறாக்கி உள்ளது. சவாலான அந்த பணியை மு.க.ஸ்டாலின் எப்படி மேற்கொள்ளப் போகிறார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதிய தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    மற்ற கட்சிகளும் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அழைப்பு விடுத்துள்ளார். இது அமைய உள்ள தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்வதற்கு விடுத்த அழைப்பாகவே கருதப்படுகிறது.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும் போது, தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல பொறுப்புகள் உள்ளன. கருணாநிதியின் எண்ணங்களை, லட்சிய கனவுகளை அவர் நிறைவேற்றுவார் என்று கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரபுல் பட்டேல் கூறும்போது, மு.க.ஸ்டாலின் கருணாநிதி காட்டிய சாதனை பாதையையும், மக்கள் நல பணியையும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரைன் பேசும்போது, பா.ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டி டெல்லி பாராளுமன்றத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். இதற்காக தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளில் வென்று சாதிக்க வேண்டும்.

    மேடையில் இருக்கும் அனைவரும் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர்கள் பலரும், பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பதை மையமாக வைத்தே பேசினர். இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

    இது பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கும். அதனை அந்த கட்சி எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. #DMK #MKStalin

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைகோர்க்கின்றன. #2019elections #UttarPradeshAntiBJP
    லக்னோ:

    நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை இந்த தேர்தலில் எப்படியும் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டது.

    மாநிலவாரியாக பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.

    இதில் முதல்கட்டமாக நாட்டின் மிகபெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்  காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்  ஆகிய மூன்று கட்சிகள் கைகோர்க்கும் மெகா கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.

    எனினும், சித்தாந்த வேற்றுமை காரணமாக சிவசேனா கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்னும் முடிவில் காங்கிரஸ் மேலிடம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

    பிரதமர் பதவி யாருக்கு? என்பதை தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்னும் சமரச திட்டத்தின்படி நாட்டின் பிற மாநிலங்களிலும் பா.ஜ.க. மீது அதிருப்தியில் இருக்கும் வலுவான எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதன் அடிப்படையில், விரைவில் சட்டசபை தேர்தல்களை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் மந்திரி வேட்பாளர்கள் யார்? என்பதை முன்கூட்டியே அறிவிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. #2019elections #UttarPradeshAntiBJP #UttarPradeshGrandAlliance 
    ×